ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை - ஒரே மாதத்தில் 5-வது சம்பவம்

2 hours ago 1

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 24 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டா நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த மாணவி, இன்று காலை தனது அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து திறந்தனர். அப்போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டா நகரில் இந்த மாதத்தில் நடந்த 5-வது தற்கொலை சம்பவம் இதுவாகும். முன்னதாக கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒடிசாவை சேர்ந்த 18 வயது மாணவர், கடந்த 17-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல் கோட்டா நகரில் கடந்த 16-ந்தேதி ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரும் ஒடிசாவை சேர்ந்தவர் ஆவார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இருவேறு சம்பவங்களில் மத்திய பிரதேசம் மற்றும் அரியானாவை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் கோட்டா நகரில் தங்கியிருந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article