
பார்மர்,
பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையருகே ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில், போதை பொருள் கடத்தல் தொடர்பாக கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ராஜஸ்தான் போலீஸ் மற்றும் பி.எஸ்.எப். படையினருடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில், 60 கிலோ எடை கொண்ட ஹெராயின் வகையை சேர்ந்த போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
இதற்காக, ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த தீவிர விசாரணையில் ஒரு பெண் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் 6 பேர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் ஆவர். இவர்களை கனடாவை அடிப்படையாக கொண்ட இந்திய கடத்தல்காரரான ஜோபன் காலெர் மற்றும் பாகிஸ்தானின் பிரபல போதை பொருள் கடத்தல்காரரான தன்வீர் ஷா ஆகியோர் பின்புலத்தில் இருந்து இயக்கி வந்துள்ளனர்.
இதனை பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பின்னணியில் இருந்து செயல்படும் மற்றும் முன்னணியில் செயல்படுபவர்களின் நெட்வொர்க் பற்றிய முழு விவரங்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில் பலர் கைது செய்யப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.