
சென்னை,
'சசிவதனே' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை கோமலி பிரசாத், தனது சினிமா வாழ்க்கை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவலுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.
அதன்படி, சமூக வலைதளங்களில் தான் நடிப்பை விட்டுவிட்டு மருத்துவத் தொழிலுக்கு சென்றுவிட்டதாக செய்திகளைப் பரப்பி வருவதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம். நான் நடிப்பிலிருந்து முற்றிலும் விலகி மருத்துவத் தொழிலுக்கு சென்றுவிட்டதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. முன்னணி ஊடக நிறுவனங்கள் கூட இதை உண்மைபோல் பரப்புவது வருத்தமளிக்கிறது.
இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். பல சிரமங்களைச் சந்தித்து, சிவபெருமானின் ஆசீர்வாதத்துடன் திரையுலகில் இந்த நிலையை அடைந்துள்ளேன். பாதியிலேயே விட்டுவிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. ஒரு நடிகையாக எனது கடைசி மூச்சு உள்ள வரை என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பேன். இந்தப் பயணத்தில் என்னை ஆதரித்து என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.
கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தற்போது மிகவும் கவனமாக இருப்பதாகவும், விரைவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்புகள் மூலம் தனது ரசிகர்களை மகிழ்ச்சியளிக்க உள்ளதாகவும் கோமலி கூறி இருக்கிறார்.