ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகளும் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் உள்ள பனோடா கிராமத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. வான்வெளியில் தடுமாறியபடி பறந்த விமானம், வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நொறுங்கிய விமான பாகங்களுக்கு அருகே பயிற்சி விமானியின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது மீட்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.ஜாகுவார் ரக விமானம் விபத்தில் சிக்குவது கடந்த 3 மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.
இது குறித்து பாதுகாப்புப் படை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் இன்று பிற்பகல் ஐஏஎஃப் ஜாகுவார் ரக போர் விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பயிற்சி விமானிகள் இருவர் உயிரிழந்தனர். இந்தத் துயர்மிகு தருணத்தில் அந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் போர் விமானம் விழுந்து விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.