5 நாடுகள் பயணத்தில் கடைசி கட்டம் பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது: அதிபர் நெடும்போ நந்தி வழங்கி கவுரவித்தார்

2 hours ago 1

விண்ட்ஹோக்: ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை அதிபர் நெடும்போ நந்தி நதைத்வா வழங்கி கவுரவித்தார். இத்துடன் 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக கடந்த 2ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். கானா, டிரினிடாட் டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு சென்ற அவர், பயணத்தின் 4ம் கட்டமாக பிரேசில் சென்றார். அங்கு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

மாநாட்டை தொடர்ந்து பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டா சில்வாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ் வழங்கப்பட்டது. அங்கிருந்து டெல்லி திரும்பும் முன்பாக, சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக ஆப்ரிக்க நாடான நமீபியாவுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நமீபியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் வர்த்தக அமைச்சகம் செல்மா அஷிபலா-முசாவ்யி வரவேற்றார்.

அங்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நமீபியா அதிபர் நெடும்போ நந்தி நதைத்வாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தி உள்ளிட்ட துகைளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆப்ரிக்காவில் மதிப்புமிக்க மற்றும் நம்பிக்கையான கூட்டாளி என நமீபியாவை புகழ்ந்த பிரதமர் மோடி, இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இருநாடுகளும் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.

நமீபியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் அந்நாட்டின் நிறுவனரும் முதல் அதிபருமான மறைந்த சாம் நுஜோமா நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இந்தியா-நமீபியா இடையேயான உறவை வலுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியதை பாராட்டும் வகையில் பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருதை வழங்கி அதிபர் நெடும்போ கவுரவித்தார். பின்னர் நமீபியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு டெல்லிக்கு புறப்பட்டார்.

* பிரதமர் மோடி நமீபியா சென்றது இதுவே முதல் முறை. மேலும், நமீபியா சென்ற 3வது இந்திய பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* விண்ட்ஹோக் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. நமீபியாவின் பாரம்பரிய நடன, இசைக்குழுவினர் நடனமாடி மோடியை வரவேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடியும் சேர்ந்து டிரம்ஸ் இசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

* இந்த 5 நாடுகள் பபயணத்தில் கானா, டிரினிடாட் டொபாகோ, இஸ்ரேல், நமீபியா ஆகிய 4 நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்துள்ளன. இதுவரை பிரதமர் மோடி 27 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

The post 5 நாடுகள் பயணத்தில் கடைசி கட்டம் பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது: அதிபர் நெடும்போ நந்தி வழங்கி கவுரவித்தார் appeared first on Dinakaran.

Read Entire Article