துபாய்: இந்தியர்கள் ரூ.23.30 லட்சம் கட்டணம் செலுத்தி வாழ்நாள் முழுமைக்கான கோல்டன் விசாவை பெறலாம் என்கிற தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் கோல்டன் விசா பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டது.
இதன்படி, ரூ.23.30 லட்சம் கட்டணம் செலுத்தி கோல்டன் விசா பெறலாம் என்றும், இந்த புதிய வகை கோல்டன் விசாவுக்கு முதற்கட்டமாக இந்தியாவும், வங்கதேசமும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கோல்டன் விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய ராயத் குழும நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டன.
பொதுவாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் கோல்டன் விசா பெற இந்தியர்கள் அந்நாட்டில் ரூ.4.66 கோடி மதிப்புள்ள சொத்தில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது அங்குள்ள வணிகத்தில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என விதிகள் கடுமையாக உள்ள நிலையில் ரூ.23 லட்சத்தில் புதிய கோல்டன் விசா பலரையும் கவர்ந்தது.
இந்நிலையில் இந்த தகவலை ஐக்கிய அரபு எமிரேட்சின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஆணையம் (ஐசிபி) மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஊடக தகவலை நிராகரித்துள்ளது. மேலும், இதற்காக எந்த தனியார் நிறுவனமும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், கோல்டன் விசாவுக்கான விதிமுறைகள், நிபந்தனைகள் அமைச்சக முடிவுகளின்படி தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளது. இதைத் தொடர்ந்து ராயத் குழுமமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.
The post ரூ.23 லட்சத்தில் பெறக்கூடிய கோல்டன் விசா குறித்த தகவல் உண்மையில்லை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு appeared first on Dinakaran.