ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள 75 புலிகளில் 25 புலிகள் கடந்த ஆண்டில் காணாமல் போயுள்ளதாக ராஜஸ்தானின் தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார். இது மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.
கடந்த ஒரு ஆண்டில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. முன்னதாக, ஜனவரி 2019 முதல் ஜனவரி 2022 வரை 13 புலிகள் காணாமல் போயிருந்தன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பவன் குமார் தெரிவித்துள்ளார். புலிகள் காணாமல் போனதற்கு பூங்கா அதிகாரிகளின் கவனக்குறைவு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு மே 17ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையில் காணாமல் போன 14 புலிகளை முதலில் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் கூறுகையில், "2 மாதங்களுக்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். சில கண்காணிப்பு குளறுபடிகள் உள்ளன, அதனை சரிசெய்ய வேண்டும். சமீபத்தில், வாராந்திர கண்காணிப்பு அறிக்கைகள் சேகரித்த போது, இந்த புலிகள் கண்காணிப்பு கேமராக்களில் சிக்காதது தெரியவந்தது" என்றார்.