‘சத்துவ குணம், ராஜஸ குணம், தாமஸ குணம் என்று குணங்களில் மூன்று வகை இருப்பதாக முன்னோர்கள் பகுத்துள்ளனர். இவற்றில் முதன்மையானது சத்வகுணம். ஆனால் பாரதியோ “ராஜஸம் பயில்” என்கிறார். முதலாவதை விட்டுவிட்டு இரண்டாவதைப் பயிலச் சொல்கிறார். ஏன்? காரணம் இருக்கிறது.ராஜஸ என்றால் உறுதியான பிடிப்பு, துணிச்சல், நிலையான எண்ணம் ஆகியவற்றைக் குறிக்கும். சத்துவ குணம் மேலானதுதான். அதற்காக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியுமா? அதனால்தான் பாரதி “ராஜஸம் பயில்” என்கிறார்.உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு போர்க்குணம் வேண்டும். நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு துணிவு வேண்டும். நபிகளார் உருவாக்கிய சமுதாயத்தில் பெண்களும்கூட தங்களின் உரிமைகளுக்காகவும் பிறரின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.
நபிகளாரிடம் ஒரு பெண் வந்தார். “இறைத்தூதர் அவர்களே, என் தந்தை என் சம்மதம் பெறாமலேயே எனக்குத் திருமணம் செய்துவிட்டார். நான் இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார்.இஸ்லாமிய வாழ்வியல் முறையில் திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் இன்றியமையாதது. நபிகளாரின் காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் இஸ்லாமியத் திருமணங்களில் மணமகள் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்று அவளிடம் “சம்மதமா?” என்று கேட்பார்கள். அவள் இசைவு தெரிவித்தால்தான் மேற்கொண்டு திருமணச் சடங்குகள் நடைபெறும். அவள் மாற்றுக் கருத்து தெரிவித்தாலோ, சம்மதம் இல்லை என்று கூறினாலோ அந்த நிமிடமே, அந்த சபையிலேயே திருமணம் நிறுத்தப்படும்.ஆகவே நபிகளாரிடம் அந்தப் பெண் வந்து முறையிட்டதும் நபிகளார் கூறினார்: “நீ விரும்பினால் அந்தத் திருமண வாழ்வில் தொடரலாம். சபையில் உன்னிடம் சம்மதம் பெறவில்லை எனில் அந்தத் திருமணத்தை நிராகரிக்கவும் உனக்கு உரிமை உண்டு.”
உடனே அந்தப் பெண், “இறைத்தூதர் அவர்களே, அந்தத் திருமணத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆயினும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்களின் உரிமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் அதை நிலைநாட்டவுமே தங்களிடம் இப்படிக் கேள்வி கேட்டேன்” என்றார்.இதன் மூலம் தன்னுடைய உரிமையை மட்டுமல்ல, உலக முடிவு நாள் வரை தோன்றக்கூடிய அனைத்துப் பெண்களின் உரிமைகளையும் அவர் நிலைநாட்டிவிட்டார்.“மதீனாவைச் சேர்ந்த அன்சாரிப் பெண்கள்மீது இறைவன் அருள் புரியட்டும். அவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஓர் ஐயம் எழுந்தால் அதைப்பற்றி நிறைவான பதில் கிடைக்கும்வரை ஓயமாட்டார்கள்” என்று ஒருமுறை அன்னை ஆயிஷா அவர்கள் மதீனா நகரத்துப் பெண்களின் துணிச்சலைப் பாராட்டிக் கூறினார்.அன்னை ஆயிஷாவும் வீரத்துக்குப் பெயர் பெற்றவர்தான். அலீ அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது, ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் கலீஃபா நீதியுடன் செயல்படவில்லை என்று ஆயிஷா கருதியதால் ஆட்சியாளருக்கு எதிராகப் போர் தொடுக்கவும் அவர் தயங்கியதில்லை.நபிகளார் உருவாக்கிய ஒரு சமுதாயத்தில் பெண்கள்கூட ராஜஸ குணத்தில் சிறந்து விளங்கினார்கள் எனில், ஆண்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன! ராஜஸ குணம் அவர்களின் உதிரத்திலேயே ஊறியிருந்தது.
– சிராஜுல் ஹஸன்.
The post ராஜஸம் பயில் appeared first on Dinakaran.