திண்டுக்கல் : சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், ராஜக்காபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலெக்டர் பூங்கொடி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும், இடைநின்ற மாணவ, மாணவிகள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும், பள்ளியில் எத்தனை மாணவ, மாணவிகள் உள்ளனர், மேலும், காலை உணவு வழங்கப்படுவது குறித்து மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் பூங்கொடி கேட்டறிந்தார். பின்னர் சமையல் கூடத்தில் மதிய உணவு தயார் செய்யும் பணியை பார்வையிட்டார்.
பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் தூசு இல்லாமல் சுத்தமாக உள்ளதா, கழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை குறித்து ஆய்வு செய்தார். காலை உணவுத் திட்டத்தில் உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு தரமாக, சுகாதாரமானதாக தொடர்ந்து வழங்க வேண்டும், பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் தனி எழுத்தர் (கல்வி) சரவணக்குமார், பள்ளித் தலைமையாசிரியர் மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
The post ராஜக்காபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.