ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஈரோட்டில் காங். ஆர்ப்பாட்டம்: மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்பு

3 hours ago 1

ஈரோடு: ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த ஒன்றிய பாஜ அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில தலைவர் செல்வ பெருந்தகை உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி எம்பி மீது கவுகாத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், ஈரோடு சூரம்பட்டி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, சுதா எம்.பி., எம்எல்ஏக்கள் ரூபி மனோகர், கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், ராகுல்காந்தி எம்பி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்த ஒன்றிய பாஜ அரசு, ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டித்தும், பொய் வழக்கை திரும்ப பெறவும், ராகுல்காந்தியிடம் ஒன்றிய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, நிர்வாகிகள் மாரியப்பன், பாஷா, அர்ஷத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஈரோட்டில் காங். ஆர்ப்பாட்டம்: மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article