புதுடெல்லி,
கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம், காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி.,க்கள் போராட்டம், பா.ஜ.க. எம்.பி.,க்களை தள்ளிவிட்ட விவகாரம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கிழே விழுந்ததாக எழுந்த புகார் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறி ஒரே பரபரப்பாக காணப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜ.க. - காங்கிரஸ் என இரு கட்சியினரும் நாடாளுமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நுழைவு வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு எதிரொலியாக, ராகுல்காந்தி தள்ளி விட்டதில் காயம் என பா.ஜ.க. எம்.பி.க்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தி மறுத்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், பன்சுரி சுவராஜ் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், "உடல் ரீதியான தாக்குதல் மற்றும் தாக்குதலை தூண்டுதல் ஆகியவற்றிற்காக ராகுல் காந்தி மீது புகார் அளித்துள்ளோம்" என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான், "தங்களது பிரச்னைகளை எழுப்ப ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.,க்கள் போராட்டம் நடத்திய போது, ராகுல் காந்தி அங்கு ஏன் செல்ல வேண்டும். வேறு வழியில் செல்லும்படி பாதுகாவலர்கள் கூறிய போதும், அதனை மீறி சென்று பா.ஜ.க .எம்.பி.,க்களை தள்ளிவிடத் துவங்கினார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார். அவர் தள்ளியதால், பா.ஜ.க.வின் மூத்த எம்.பி., விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் எம்.பி.க்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர். மேலும் பா.ஜ.க .தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும். நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கார்கேவும், ராகுலும் மன்னிப்பு கேட்பார்கள் என நம்பினோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. நாகலாந்து பெண் எம்.பி., பாங்னோன் கொன்யாக், கூறியது மிகுந்த வேதனை அளிக்கிறது. தான் முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாக அவர் மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்துள்ளர். அப்போது கண்ணீருடன் மனு அளித்ததாக அவைத்தலைவர் கூறியுள்ளார்" என்று அவர் தெரிவித்திருந்தார்.