ராகுல் காந்தியை ஒரு பொருட்டாக யாரும் எடுப்பது இல்லை: மத்திய மந்திரி பியூஷ் கோயல்

1 day ago 4

புதுடெல்லி,

அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்ணயித்து உள்ள பரஸ்பர வரி விதிப்பு காலக்கெடு வருகிற 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரி பியூஸ்கோயல் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் இறுதி செய்ய இந்தியா அவசரப்படவில்லை.தேசிய நலன் தான் முக்கியம் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி.யும். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி பிரதமர் மோடியை கடும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் வலை தள பதிவில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் எவ்வளவு வேண்டுமானலும் மார் தட்டிக்கொள்ளலாம். என் வார்த்தையை கவனியுங்கள். மோடி டிரம்பின் வரி விதிப்பு காலக்கெடுவுக்கு சாந்தமாக அடிபணிவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது. நாட்டின் நலனை மனதில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போது இருப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா அல்ல. அப்போது நாட்டு நலனுக்கு அல்லாமல் பேச்சுவார்த்தைக்காக கெஞ்சினர். ராகுல் காந்தியும், அவரது கட்சியும் எதிர்மறை விஷயத்தையே பரப்பி வருகின்றனர். இதனால், ராகுல் காந்தியை யாரும் ஒரு பொருட்டாக எடுப்பது இல்லை. அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்" என்றார்.

Read Entire Article