ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

3 hours ago 1

புதுடெல்லி,

கடந்த 15ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛நம் சித்தாந்தம் என்பது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் போல் ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது.

தொடர்ந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோம். இந்த சண்டையை சரியான முறையில் செய்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக சண்டையிடுவதாக நீங்கள் நினைத்தால் உங்களுக்கு சரியான புரிதல் என்பது இல்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் நம் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் (காங்கிரஸ்) பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்'' என்றார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டில் இருந்து கொண்டே இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்று உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளதாக கூறி பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ராகுலின் இந்த பேச்சை கண்டித்து ராமா ஹரி புஜாரி என்பவர் ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராகுல் காந்தி மீது ஏற்கனவே இதுதொடர்பான புகாரில் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். தற்போது ஒடிசா போலீசார் ராகுல் காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Read Entire Article