
சென்னை
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு, வெட்கமே இல்லாமல் தான்தான் காரணம் என்று பெருமை பேசுகிறார் பழனிசாமி. உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததுதான் பழனிசாமி செய்த கேவலமான சாதனை.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் தொடர்புகொண்டுள்ளார்கள் என்று அறிந்தவுடன், அவர்களைக் காப்பாற்ற பழனிச்சாமி மேற்கொண்ட பித்தலாட்டங்களுக்கும் அளவில்லை; மூடி மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கும் கணக்கில்லை! அப்பொழுது திமுகவும் இதர எதிர்க்கட்சிகளும் நடத்தியப் போராட்டங்களின் விளைவாகத்தான் வேறு வழியின்றி பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இந்தப் பித்தாலாட்டத்தை இன்று முதலமைச்சர் சுட்டிக் காட்டி பேசியதும் ஓடோடி வந்து அவதூறுகளை அள்ளி வீசி சென்றிருக்கிறார் பித்தலாட்டக்கார பழனிசாமி!
பொள்ளாச்சி வழக்கில் இன்று கிடைத்திருக்கிற தீர்ப்புக்கு, திமுகவுக்கு என்ன பங்கு உள்ளது என கேட்கிறார் பழனிசாமி. திமுக தலைவர் இப்பிரச்னையை கையில் எடுத்திருக்காவிட்டால் 2021 வரை இந்த லீலைகளை அதிமுக நிர்வாகிகள் நடத்தி இருப்பார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடும் போராட்டங்களும்தான் காரணம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரைத் தாக்கியது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டு அச்சுறுத்தியது என பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதுதான் பொள்ளாச்சி வழக்கில் பழனிசாமி ஆட்சியின் சாதனை. இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட பிறழ் சாட்சியமாக மாறாமல் இருந்திருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற பாதுகாப்பான சூழலும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனும் நம்பிக்கையும்தான் காரணம்.
யார் அந்த சார்? என அருவருப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு தோற்றுப் போன பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றமே பாராட்டியது என்பதை அறிவாரா?
பழனிசாமியின் பதட்டத்திற்குக் கொடநாடு கொலை வழக்குப் பற்றி முதலமைச்சர் பேசியிருப்பதுதான் காரணம். தனது கட்சியின் தலைவர் வாழ்ந்த வீட்டையே பாதுக்காக்க முடியாமல் அவல ஆட்சி நடத்திய பழனிசாமிக்குக் கொடநாடு என்றவுடன் ஏன் தொடை நடுங்குகிறது?
டெல்லியில் பதுங்கிப் பதுங்கி அமித்ஷாவைச் சந்தித்த பழனிசாமி, எதற்காக சந்தித்தார் என்பது பச்சைக் குழந்தைக்கும் தெரியும். அதனை அறியாமல் பச்சைப் பொய்களை அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிசாமி!
நூறுநாள் வேலைத்திட்டம், மெட்ரோ திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டி ஒன்றிய அரசுக்குக் கடிதம் வாயிலாகவும், நேரிலும், நாடாளுமன்றத்தின் வாயிலாகவும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது தமிழ்நாடு அரசு, மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது திமுக.
ஆனால் தனது சந்திப்பால்தான் நிதி கிடைத்தது என கூசாமல் 'Cringe' செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி! அமித்ஷாவைப் பார்க்கப் போகிறேன் என்பதைச் சொல்லக்கூட திராணி இல்லாமல், டெல்லியில் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாரே கோழைசாமி, அதுதான் உண்மையான பித்தலாட்டம்!
மத்திய அரசின் ரெய்டு நடவடிக்கையால், தனக்கோ தன் மகனுக்கோ சம்மந்திக்கோ பாதிப்பு வந்துவிடக்கூடாது. பணம், சொத்துக்கள் முடக்கப்பட்டு விடக்கூடாது என்ற பயத்தில்தான் பாஜகவோடு கூட்டணி வைத்தார். தனது பணத்தை காப்பாற்றிக்கொள்ள போராடிய பழனிசாமி, தமிழ்நாட்டுக்கு நிதியை வாங்கி கொடுத்தார் என்றால் பழனிசாமியின் பேரன்கூட நம்பமாட்டான்.
திமுக மக்களிடம் பெற்றிருக்கும் பேராதரவால் தன்னிலை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் மனம்போன போக்கில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து தனது கட்சியையே டெல்லியில் அடகு வைத்துவிட்டு வந்த எடுபுடி பழனிசாமிக்கு, மாநில உணர்வு என்று சொல்லுவதற்குத் தகுதி இல்லை. பழனிசாமியின் இந்தக் கபட நாடகங்கள் எந்தக் காலத்திலும் மக்களிடம் வெற்றிபெறப் போவதில்லை. படுதோல்வி பழனிசாமி எனும் அடையாளம் மாறப் போவதுமில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.