
லக்னோ,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது அவதூறான கருத்துகளை பேசியதாக குற்றம்சாட்டி, உத்தர பிரதேசத்தின் ஹனுமன்கஞ்ச் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராக தவறியதை தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராகுல் காந்தி கோர்ட்டில் சரணடைந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 26ம் தேதி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அவருக்கு தலா ரூ.25,000 மதிப்புள்ள இரண்டு பிணைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தனக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த வழக்கு பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 11ம் தேதி மீண்டும் சிறப்பு நீதிபதி சுபம் வர்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரளித்த விஜய் மிஸ்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே, ராகுல் காந்தியின் வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா தனது கட்சிக்காரரிடம் நடத்திய குறுக்கு விசாரணை நிறைவடைந்ததாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது புகார்தாரரின் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.