ரோகித், கோலிக்கு ஒரு நியாயம்.. பும்ராவுக்கு ஒரு நியாயமா..? இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

4 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரான அவருக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்காதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோகித் இல்லாத சூழலில் இந்திய டெஸ்ட் அணியை பும்ரா வழி நடத்தினார். இதனால் பும்ராதான் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் பும்ரா முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் சொன்னதால் அவரை கேப்டனாக நியமிக்கவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதனாலேயே கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த காலங்களில் விராட் கோலி, ரோகித் சர்மா ஒரு தொடரில் முழுமையாக விளையாடாத போதும் கேப்டனாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். எனவே விராட், ரோகித்துக்கு ஒரு நியாயம் பும்ராவுக்கு ஒரு நியாயமா? என்று மறைமுக கேள்வி எழுப்பும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"கேப்டன்ஷிப் தேர்வு வேடிக்கையான ஒன்றாக அமைந்துள்ளது. என்னால் பும்ரா ஏன் கேப்டனாக கருதப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. முழுமையாக விளையாட மாட்டார் என்பதால் அவரை கேப்டனாக கருதவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

கடந்த காலங்களில் விராட் கோலி முழுமையாக விளையாடாத டெஸ்ட் தொடர்கள் இருந்தன. அதையும் தாண்டி இருந்தும் அவர்கள் கேப்டனாக செயல்பட்டனர். அப்படிப்பட்ட நிலையில் உங்களுடைய சிறந்த பவுலரான பும்ரா முதல் 2 போட்டிகளில் விளையாடினால் கூட அவரை நீங்கள் கேப்டனாக விளையாட வைக்க வேண்டும். ஆனால் அதை செய்யாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.

Read Entire Article