ராகு கோடீஸ்வரர் ஆக்குவார்

1 week ago 3

சர்ப்பக் கிரகங்களில் ஒருவரான ராகு பகவான் வக்ர கிரகம் அதாவது எதிர்ப்புறமாக சுற்றி வருபவர். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாறுபவர். கரும் பாம்பு என்பார்கள். பாப கோள்களில் தலையாய பங்கு வகிப்பவர்.
விருச்சிக ராசியில் உச்ச பலமும், ரிஷபத்தில் நீச்ச பலமும் உடையவர் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த நீச்சபலம் உச்ச பலத்தை சில ஜோதிடர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியின் அமைப்பில் இயங்கும் என்பார்கள்.

மேஷம், கடகம், சிம்மம், கும்பம் முதலிய ராசிகள் பகை ராசிகள். கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் நட்பு ராசிகள்.

ராகு – கேதுவுக்கு பார்வை இல்லை என்று ஒரு கட்சி. பார்வை உண்டு என்று ஒரு கட்சி. அதிலும் எந்தெந்த பார்வை என்பதிலும் வித்தியாசம் உண்டு. சிலர் 3,6,7,11 ஆகிய இடங்களைப் பார்ப்பவர் என்பார்கள். மற்ற கிரகங்களுக்கு நேர் அமைப்பில் (clockwise) பார்வைகளை கணக்கிட வேண்டும். ஆனால், ராகு கேதுவுக்கு எதிர்ப்புறமாகக் (anti clock wose) கணக்கிட வேண்டும்.

பரம ஏழையாக இருந்த ஒருவனை திடீர் உச்சாணிக் கொம்பில் ஏற்றும் வல்லமை ஒருவருக்கு உண்டு என்றால் அது ராகுதான்.

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ராகுவிற்கு உரிய நட்சத்திரங்கள்.

ராகுவுக்குரிய இந்த மூன்று நட்சத்திரங்களும் அற்புதமானவை. ஆன்மிகமானவை. குறிப்பாக “திரு” என்ற அடைமொழியோடு இரண்டு நட்சத்திரங்கள்தான் இருக்கின்றன. ஒன்று சந்திரனுக்குரிய திருவோணம். இன்னொன்று ராகுவுக்கு உரிய திருவாதிரை.

ராகு இருள் கிரகமாக இருந்தாலும், ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை ஒளிமிகுந்த நட்சத்திரம். ‘‘அலகில் சோதியன்” என்று சொல்லப் படுகின்ற ஜோதி வடிவான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம்.

இந்த நட்சத்திரத்தில்தான் ராமானுஜர் அவதரித்தார். அதைப்போலவே சுவாதி நட்சத்திரம் மகாலட்சுமிக்குரிய துலா ராசியில் அமைந்துள்ள நட்சத்திரம். இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த கல்விமான்களாக, வேத விற்பன்னர்
களாக, மேதைகளாக திகழ்வார்கள். இந்த நட்சத்திரத்தில் தான் பெரியாழ்வார் அவதரித்தார். கருடனுடைய நட்சத்திரமும் இதுதான். பகவான் நரசிம்மனே இந்த நட்சத்திரத்தில் தான் அவதரித்தார். ராகு பிரம்மாண்டத்தை காண்பிப்பது. எல்லையில்லாத தன்மையைக் காண்பிப்பது. அதனால் தான் இந்த நட்சத்திரம் அத்தனை சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

ராகு யோகங்களில் ஒன்று அரசாள வைப்பது. ராகுவின் இன்னொரு நட்சத்திரமான சதய நட்சத்திரம் அற்புதமானது. அது சனியின் வீடான கும்ப ராசியில் அமைந்துள்ளது. இந்த சதயத்தில் பிறந்து அகில உலகத்தை எல்லாம் ஆண்டவன் ராஜராஜ சோழன்.

இந்த அடிப்படையில் ராகு ஒருவரை நினைக்க முடியாத அளவுக்கு உயர்த்தக்கூடிய வல்லமை வாய்ந்தவர். அதற்கான நட்சத்திரங்களை தம்வசம் வைத்திருப்பவர் என்பது தெரிய வருகிறது.

பொதுவாகவே வெளிநாட்டு யோகம் ஒரு ஜாதகத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றால் ராகுவின் நிலையைப் பார்த்துச் சொல்வார்கள். சனியின் தன்மையை உடையவர் “சசிவத் ராகு” என்பதால் சனிக்கு உரிய அத்தனை பலன்களையும் ராகு தருவார் என்பார்கள்.

ராகு பாவ கிரகம் என்று சொல்லப்பட்டாலும் யோக கிரகமாக பெரும்பாலான ஜாதகங்களில் செயல்படுவது உண்டு. சிலருக்கு ராஜ யோகத்தையும் கோடீஸ்வர யோகத்தையும் அள்ளித்தருவார். ராகு மகாதிசையில் மந்திரி மற்றும் உயர் பதவிகளில் வாய்ப்பையும் அள்ளித்தருவார்.

வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு ராகு மகாதிசையில் திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார்.

பெரும் பாலான நடிகர்கள் ஜாதகங்களில் அவர்கள் மிகப்பெரிய ஏற்றத்தை ராகு திசையில் அடைந்திருப்பதை அவர்கள் ஜாதகங்களில் காணலாம். சினிமாத் தொழிலுக்கு சுக்கிரனையும் ராகுவையும் பார்க்க வேண்டும்.

பொதுவாக ராகுபகவான் பூர்வ புண்ணிய அதிபதி சாரம் பெற்று அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ராஜயோக பலனை ஏற்படுத்துவார்.

அதேபோல் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய வீட்டில் சுயசாரம் பெற்று அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ராஜயோக பலனைத் தருவார்.

ராகுபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்து அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் ராஜயோக பலனை ஏற்படுத்துவார். அனைத்து கிரகங்களும் ராகு – கேதுவிற்குள் அமர்ந்தால் காலசர்ப்ப யோகம் உண்டாகும். அதாவது ராகுபகவான் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய நட்பு வீடுகளில் ராகு அமர்ந்து அதற்கு அடுத்தடுத்த வீடுகளில் கிரகங்கள் அமர்ந்தால் காலசர்ப்ப யோகம் உண்டாகும்.

இந்த யோகம் ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய லக்னகாரர்களுக்கு மட்டுமே முழுயோகத்தைச் செய்வார் மற்ற லக்னகாரர்களுக்கு ராகுவால் காலசர்ப்ப தோஷம் உண்டாகும்.

ஒருவருக்கு ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனைத் தருவார். ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.

உதாரணமாக, கும்ப லக்கினம். 3ல் ராகு.10 வயது முதல் 28 வயதுவரை ராகு திசை. மிகச் சிறந்த உடல் பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். இன்னொரு ஜாதகம். கன்னி லக்கணம். 4ல் சூரியன் ராகு. ரோகிணியில் பிறந்த இவருக்கு 5 வயதுவரை சந்திர தசை. பின் 7 ஆண்டு செவ்வாய் தசை. பின் 18 ஆண்டுகள் ராகு தசை. வாழ்க்கையில் செட்டில் ஆக விடவில்லை. காரணம் ராகுவுக்கு வீடு தந்த குரு ராகுவுக்கு 8ல் மறைவு.

இளம் பருவத்தில் ராகு திசை நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும்.

மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் ராகு அமர்ந்து அந்த ராகுவுக்கு கேந்திரங்களில் ஒரு கேந்திரம் கூட பாக்கியமில்லாமல் வேறு கிரகங்கள் அமர்ந்திருந்தால் அது பர்வத யோகம் எனப்படும். இந்த ராஜயோகத்தில் பிறந்த ஜாதகர் மிகப்பெரிய கோடீஸ்வர யோகம் அடைவார். ஜாதக அலங்காரத்தில் சொல்லப்பட்ட மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து 1, 4, 7, 10ல் கிரகங்கள் இருந்தாலும் தன்னுடைய ராகு திசையில் மிகப்பெரிய ராஜயோகத்தை அள்ளித்தருவார்.

நடுத்தர வயதில் ராகு திசை யோகமாக நடைபெற்றால் எதிர்பாராத பணம் சேரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். முதுமை பருவத்தில் ராகு வரலாம். யோகமாக இருக்க வேண்டும். அப்படி நடைபெற்றால் வசதி வாய்ப்புகள்,
எதிர்பாராத பணவசதி, உண்டாகும். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் ராகுபகவான் சுபத்துவமடைந்து 6,8,12 ஆம் அதிபதிகள் சாரம் பெற்று குரு அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட்டாலும் யோகம் உண்டாகும்.

The post ராகு கோடீஸ்வரர் ஆக்குவார் appeared first on Dinakaran.

Read Entire Article