திருவள்ளூர்: ''இறந்த பிணங்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக சினிமா வசனம் பேசி உள்ள நடிகர் கஞ்சா கருப்பு கூறியது முற்றிலும் தவறு; இந்த விவகாரத்தை மீண்டும் கிளறினால் கஞ்சா கருப்புக்குதான் பாதிப்பு’’ என, சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.33 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் 4 பேட்டரி கார்கள், மருத்துவ மாணவ மாணவியர்களுக்கான 2 பேருந்துகள் ஆகியவற்றின் சேவையை இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘’நடிகர் கஞ்சா கருப்பு அவருடைய மகனின் சிகிச்சைக்காக சென்னை, சின்ன போரூரில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவர்கள் மருத்துவமனை உள்ளே இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர் இல்லை என, ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மருத்துவர்களே இல்லை; செத்துப்போன பிணத்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என சினிமா வசனம் பேசுவது போல் பேசி விட்டு வந்துள்ளார்.
உடனடியாக மேயர், சமூக வலைதளத்தின் வாயிலாக எத்தனை மருத்துவர்கள் இருந்தார்கள். எத்தனை பணியாட்கள் இருந்தார்கள் என்ற செய்தியை சொல்லி இருக்கிறார். இந்த பிரச்சினையை மீண்டும் கிளறினால் அவருக்குத்தான் பாதிப்பு’’ என தெரிவித்தார்.