
திண்டுக்கல்,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துஷார் ரஹேஜா- அமித் சாத்விக் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். திண்டுக்கல் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி அணியின் ரன் வேகத்தை சீராக உயர்த்தியது. வெறும் 10.4 ஓவர்களில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அரைசதம் அடித்து அசத்திய அமித் சாத்விக் 65 ரன்களில் (34 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் கிஷோர் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த துஷார் ரஹேஜாவும் 77 ரன்களில் (46 பந்துகள்) ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறிது அதிரடி காட்டிய முகமது அலி 23 ரன்களில் (14 பந்துகள்) வருண் சக்ரவர்த்தி சுழலில் சிக்கினார்.
இறுதி கட்டத்தில் சசிதேவ் ( 20 ரன்கள்) மற்றும் அனோவங்கர் (25 ரன்கள்) அதிரடியாக விளையாட திருப்பூர் அணி 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 220 ரன்கள் குவித்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்க உள்ளது.