ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் துஷில் இந்திய கடற்படையில் சேர்ப்பு

1 month ago 5

புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலான ஐஎன்எஸ் துஷில் நேற்று கலினின்கிராட்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்திய கடற்படையை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவுடன் 4 போர்க்கப்பல்கள் வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு கப்பல்கள் ரஷ்யாவிலும், இரண்டு கப்பல்கள் இந்தியாவிலும் கட்டப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் துஷில் என்ற ஏவுகணை போர்க்கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டு வந்தது. இதற்கான பணிகள் முடிந்து பல கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனைகள் வெற்றி பெற்றதை அடுத்து ஐஎன்எஸ் துஷில் நேற்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் 125மீட்டர் நீளம் மற்றும் 3900 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் இந்திய, ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் கூடிய தாக்குதல் கருவிகள் மற்றும் அதிநவீன போர் ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளன. ரஷ்யாவின் கலினின்கார்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஐஎன்எஸ் துஷில் ஏவுகணை போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் துஷில் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் செயல்பாட்டு திறனை வெகுவாக உயர்த்தும் என்று நம்பப்படுகின்றது.

The post ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் துஷில் இந்திய கடற்படையில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article