வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் டெலிபோனில் பேசினார். இதன் மூலம் ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வர இருப்பதாக தெரிகிறது. அமெரிக்கா – ரஷ்யா இடையே 1960ம் ஆண்டில் நடந்த பனிப்போருக்கு பிறகு மிகமிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நேட்டோ படையில் உக்ரைன் இணைய விரும்பியதுதான். இதற்காக முயற்சிகளை செய்தது. சோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது ரஷ்யாவும், உக்ரைனும் ஒன்றாக இருந்தது. அதற்கு பிறகு 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்தபோது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் ரஷ்யாவிற்கு பெரிய ஆபத்தாகும்.
இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு வழங்கிய அனைத்து உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தி உள்ளது. அதிபராக பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. அமெரிக்கா- ரஷ்யா சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினேன்.
இது ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இருந்தது. உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம். இரு நாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் உரையாடினோம். உக்ரைனுடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்பு கொண்டுள்ளோம். அமெரிக்காவுக்கு புதினும், ரஷ்யாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
The post ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? புதினுடன் டெலிபோனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.