ரஷியாவுக்கு எதிரான போர்; உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு

6 hours ago 1

வாஷிங்டன்,

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. தொடக்கத்தில் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியது. ஆனால், அவற்றை உக்ரைன் மீட்டது. இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி ஆதரவாக இருந்து வருகிறது.

போரால் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. இதற்காக ரஷிய அதிபர் புதினுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷியா நிறுத்தவில்லை. ஆனால், சமீபத்தில் சிக்கன நடவடிக்கையாக உக்ரைனுக்கான ஆயுத உதவியை அமெரிக்கா நிறுத்தியது. இதேபோன்று, உளவு தகவலையும் நிறுத்தியது. இந்த சூழலில், ரஷியா உக்ரைனை கடுமையாக தாக்கியது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கோரினார்.

உக்ரைனுக்கான ஆயுத விநியோகம் நிறுத்தம் பற்றிய அமெரிக்காவின் அறிவிப்பு வெளியான சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி பேசினார். அப்போது அவர், நாங்கள் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க முடிவு செய்திருக்கிறோம். அதுவும் முதல்கட்டத்தில் தற்காப்புக்கான ஆயுதங்கள் வழங்கப்படும் என கூறினார்.

உக்ரைன் மிக மிக கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. விளாடிமிர் புதினின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியற்று இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதனால், ரஷியாவுக்கு எதிரான போரை உக்ரைன் இன்னும் தீவிரப்படுத்த கூடும் என பார்க்கப்படுகிறது. இது மீண்டும் உலகளாவிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

போரால், எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையுயர்வு உள்ளிட்ட தாக்கங்கள் ஏற்பட்டன. இதனால், உலகில் வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு போரை தீவிரப்படுத்த கூடிய ஒன்றாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

Read Entire Article