
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை அண்ணாசாலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டிக்க தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில், தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யவும், ஊதியத்தை உயர்த்தி வழங்கவும் கோரி கடந்த பலஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து வந்த போதும், தமிழக அரசு அவ்வப்போது வாய்மொழி உத்தரவாதங்களை அளித்து அவர்களின் போராடங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த ஆட்சியில் பகுதி நேர ஆசிரியர்கள் போராடியபோது, தற்பொழுது ஆளும் தி.மு.க, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதுவரை நிறைவேற்றாமல் அவர்களை வஞ்சித்து வருகிறது.
தற்பொழுது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது. தமிழக அரசு உடனடியாக அவர்கள் மீது எந்தவிதமான வழக்குகளும் பதியாமல் விடுவிக்க வேண்டும். அதோடு பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.