
மாஸ்கோ:
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த சண்டையில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து சில நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, வடகொரிய வீரர்களை ரஷியா பயன்படுத்துவதாகவும், அவர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.
முதல் இதுபற்றி உறுதியான தகவலை வெளியிடாமல் இருந்த ரஷியா, சமீபத்தில் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக ரஷிய ராணுவ தலைமை தளபதி வலேரி ஜெராசிமோவ் தெரிவித்தார். வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டதாகவும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக போரிடுவதற்கு துருப்புகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதி செய்துள்ளது. குர்ஸ்க் பகுதியில் உக்ரைனின் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ரஷிய பிரதேசத்தை திரும்ப பெறுவதற்கான தாக்குதலில் வட கொரிய படைகள் பங்களிப்பை வழங்கியதாகவும் கூறி உள்ளது.
இதுபற்றி வட கொரியாவின் அதிகாரப்பூர்வமான மத்திய செய்தி நிறுவனத்திற்கு ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய ராணுவ ஆணையம் இன்று செய்தி அனுப்பி உள்ளது. அதில், ரஷியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஷிய படைகளுடன் சேர்ந்து போரிடுவதற்காக துருப்புக்களை நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
வட கொரியா இவ்வாறு உறுதி செய்ததைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய தலைவர் கிம்மிற்கு தனிப்பட்ட முறையில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். தனது நாட்டின் கொரிய நண்பர்கள் ஒற்றுமை, நீதி மற்றும் தோழமை உணர்வுடன் செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.