
லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மருத்துவ விசாவில் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற (29ம் தேதி) உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சிய பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துவிட்டது.
அதேவேளை, இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் வசித்து வந்த இந்தியர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. மேலும், இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் 30ம் தேதிக்குள் பாகிஸ்தான் திரும்பவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 6 நாட்களில் பாகிஸ்தானில் இருந்து 1,000 இந்தியர்கள் வாகா எல்லை வழியாக வெளியேறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து தற்போதுவரை 800 பாகிஸ்தானியர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.