கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. இதன் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. எனினும், இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை எதுவும் பெரிய பலன் தரவில்லை.
இந்நிலையில், ரஷியாவுக்கு ராணுவ உதவியை வடகொரியா செய்து வருகிறது என தகவல் வெளியானது. ராணுவ வீரர்களையும் அனுப்பி வருகிறது. இது போரை தீவிரப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ரஷியா மற்றும் வடகொரியா இடையே ஏற்பட்டு உள்ள கூட்டணிக்கு உலக தலைவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார். இந்த ஆபத்து தரும் கூட்டணியால் போர் நீளும் என அவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் ரஷியாவுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இந்த உதவிக்கு பதிலாக, ரஷியா அதனை எப்படி திருப்பி செலுத்த போகிறது? என கேட்டுள்ள அவர், ரஷியாவுக்கு ராணுவ அதிகாரிகளையும் வடகொரியா அனுப்பி வருவது பற்றிய தகவலை வெளியிட்டார். இந்த தீவிர அச்சுறுத்தல் பற்றி சர்வதேச நட்பு நாடுகள் ஒரு வெளிப்படையான பதிலை தர வேண்டும் என உக்ரைன் அரசு எதிர்பார்க்கிறது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கான சான்றுகளை செயற்கைக்கோள்கள் வழியேயும் மற்றும் ரஷியாவில் இருந்து வெளிவரும் வீடியோக்களால் நாம் அனைவரும் காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், போர் நீடிக்குமே தவிர, உலக அளவில் ஒருவருக்கும் பலன் ஏற்படாது என தெரிவித்ததுடன், போரானது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.