
ரியோ டி ஜெனிரோ,
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 'பிரிக்ஸ்' (BRICS) நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ரஷியா மற்றும் சீனாவின் நிதி மந்திரிகளுடன் நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா மற்றும் இந்தியா-ரஷியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ரஷ்ய நிதி மந்திரி அன்டன் சிலுவானோவ் உடனான சந்திப்பின்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். பின்னர் அவர்கள் இந்தியா-ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து விவாதித்தனர்.
இதே போல் சீன நிதி மந்திரி லான் போனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து நிர்மலா சீதாராமன் விவாதித்தார். உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக இரு நாடுகளும் இருப்பதால், உள்ளார்ந்த உலகளாவிய வளர்ச்சி மற்றும் புதுமைகளை அடையக் கூடிய நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன என்று அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் துணை நிதி மந்திரி தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி மந்திரி பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.