ரஷியா-உக்ரைன் இடையே அமீரகம் சமாதான முயற்சி: 300 பணய கைதிகள் விடுதலை

3 hours ago 1

அபுதாபி,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் பலர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்கும் முயற்சியில் அமீரகம் ஓராண்டாக ஈடுபட்டு வருகிறது. இதில், பலன் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளின் கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான மூன்றாண்டு கால போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளனர். இரு நாட்டு போரின்போது இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இவர்களை பரஸ்பரம் விடுவிக்கும் வகையில் அமீரகம் கடந்த 2024-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது நடப்பு ஆண்டில் 12-வது முறையாக அமீரகத்தின் சார்பில் இந்த சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதற்கு இரு நாட்டு அரசுகளும் பரஸ்பரம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கின. இதன் பலனாக தற்போது இரு நாடுகளை சேர்ந்த தலா 150 கைதிகள், அதாவது ரஷியா-உக்ரைன் நாடுகளை சேர்ந்த மொத்தம் 300 பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டு பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டு உள்ளனர்.

இரு நாட்டு எல்லைப்பகுதியில் நடந்த பணய கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் அமீரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தினரை பார்த்த இரு தரப்பு கைதிகள் கட்டியணைத்து ஆனந்த கண்ணீருடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த குழுவில் பலர் 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறை பிடிக்கப்பட்டு விடுதலையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷிய பணய கைதிகள் நட்பு நாடான பெலாரசில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அமீரகம் மேற்கொண்ட சமாதான முயற்சியின் பலனாக இதுவரை மொத்தம் இரு தரப்பிலும் 2 ஆயிரத்து 883 பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் செய்து அமைதியை நிலை நிறுத்த அமீரகம் முக்கிய பங்காற்றி வருகிறது.

தொடர்ந்து அங்குள்ள நிலைமை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமீரகம் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மனிதாபிமான உதவிகளுக்கு உக்ரைன் அரசு தனது நன்றியை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article