சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்: முதல்வர் ஸ்டாலின்: அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.