?கஜகேசரி யோகம் என்றால் என்ன?
– சுபா, ராமேஸ்வரம்.
ஜனன ஜாதகத்தில் குரு மற்றும் சந்திரன் ஆகியோரின் அமர்வு நிலையைக் கொண்டு இந்த கஜகேசரி யோகத்தினை தீர்மானிப்பார்கள். சந்திரன் குருவுடன் சேர்ந்து இருந்தாலும் அல்லது சந்திரன், குருவிற்கு 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அல்லது சந்திரனை குரு பார்த்தாலும் கஜகேசரி யோகம் இருப்பதாகச் சொல்வார்கள். இந்த கஜகேசரி யோகம் என்பது பலமாக அமைந்திருந்தால் ஜாதகருக்கு நற்பெயர், தலைமை குணம், நீடித்த புகழ், தர்மகுணம், நுட்பமான அறிவு, உயர்கல்வி ஆகியவை உண்டாகும். எந்த ஒரு கஷ்டமான சூழலையும் சமாளிக்கும் திறனை பெற்றிருப்பார்கள்.
?குருபகவான் – சனி பகவான் இவர்களில் நல்லது அதிகம் செய்பவர் யார்?
– வண்ணை கணேசன், சென்னை.
முதலில் இவர்கள் இருவரும் பகவான் இல்லை. பகவான் என்பது கடவுளைக் குறிக்கும் சொல். பரமேஸ்வரனை பகவான் என்று சொல்லலாம். ஸ்ரீமந் நாராயணனை பகவான் என்று சொல்லலாம். குரு, சனி ஆகியோர் கடவுளின் பணியாளர்கள். இவர்கள் தங்கள் கடமையைச் செய்யும் கிரஹங்கள். குருவை சுபகிரஹம் என்றும் சனியை அசுப கிரஹம் என்றும் பொதுவாக ஜோதிட விதிகள் சொல்கின்றன. ஆனால் ஜாதகத்தில் இந்த கிரஹங்கள் அமரும் இடத்தினைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். சனியினால் நன்மையும் நடக்கும், குருவினால் அசுப பலனும் உண்டாகும். இது அவரவர் ஜாதக அமைப்பினைப் பொறுத்து மாறுபடும் என்பதே உண்மை.
?ஒருவர் வீட்டில் முன்னோர்களின் சாபம் இருப்பதை கண்டறிவது எப்படி?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
வீட்டிற்குள் நுழையும்போதே அறிகுறிகள் தெரிந்துவிடும். அந்த வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் களையின்றி விரக்தி யான மனநிலையில் இருப்பார்கள். அந்த இல்லத்தில் உற்சாகம் ஏதுமின்றி ஒருவிதமான சூனியமான சூழல் என்பது நிலவும். குடும்ப உறுப்பினர்களில் எவருக்கேனும் மனநிலை சரியில்லாமல் இருந்தாலும் அல்லது நீண்ட காலமாக பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தாலும் வம்சவிருத்தி உண்டாகாமல் இருந்தாலும் பிறக்கின்ற குழந்தைகளின் மனநிலை பாதிப்படைந்திருந்தாலும் அந்த வீட்டில் முன்னோர்களின் சாபம் இருப்பதை உணர்ந்துகொள்ள இயலும். இதுபோக ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஒன்பதாம் பாவகத்தில் சூரியனோ சந்திரனோ ராகு, கேது முதலான அசுபகிரஹங்களின் இணைவு பெற்று அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு முன்னோர்களின் சாபம் இருப்பதை அறியமுடியும்.
?அடிக்கடி இருசக்கர வாகனத்தில் நான் விபத்தில் சிக்கிக் கொள்கிறேன். எதனால்? எனது ராசி கன்னி & நட்சத்திரம் ஹஸ்தம்.
– வெங்கடேஷ், ஸ்ரீரங்கம்.
வெறும் ராசி நட்சத்திரத்தைக் கண்டு பலன் சொல்ல இயலாது. தற்போது உங்களுக்கு ராகு தசையில் சூரிய புக்தி நடந்து கொண்டிருந்தாலோ அல்லது ஜனன ஜாதகத்தில் நான்காம் பாவகத்தில் அசுப கிரஹங்கள் இருந்து அவர்களுடைய தசாபுக்தி காலம் நடந்தாலோ இதுபோல் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் ஊரில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு வெள்ளிக்கிழமை நாளில் சென்று துளசிமாலை சாற்றி வழிபட்டு வாருங்கள். விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
?பூஜை அறையில் உள்ள மகாலட்சுமியை வழிபட எத்தனை எண்ணிக்கையில் ஏலக்காய் மாலை அணிவிக்க வேண்டும்?
– பொன்விழி, அன்னூர்.
மாலை என்றாலே அது புஷ்பத்தால் தொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது முத்து, பவழம் போன்ற ரத்தினங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ருத்ராட்ச மாலை, துளசிமணி மாலை மற்றும் தாமரை மணி மாலை ஆகியவையும் சாஸ்திரத்திற்கு உட்பட்டது. மற்றபடி நீங்கள் சொல்வது போல் ஏலக்காய் மாலை என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்டதே என்பதால் இதில் சாஸ்திரக் கணக்கு ஏதும் இல்லை.
?ஆன்மிகத்தில் 108, 1008 என்ற எண்ணிக்கை விசேஷமாகப் பயன் படுத்தப்படுவதன் தாத்பரியம் என்ன?
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.
இறைவனுக்கு 108 திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வதை அஷ்டோத்ர சத நாமாவளி என்று சொல்வார்கள். நாம் பொதுவாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஜோதிடரிடம் செல்லும்போது அவர் கணக்கிட்டுப் பார்த்து இந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சொல்வார். அதாவது குழந்தை பிறந்த நட்சத்திரம் மற்றும் பாதம் ஆகியவற்றைக் கணக்கிட்டு அதற்குரிய எழுத்தினைச் சொல்லி அந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சொல்வார். ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் வீதம் 27 நட்சத்திரத்திற்கு 108 பாதங்கள் என்று வரும். இந்த 108 பாதங்களுக்கு 108 எழுத்துக்கள் என்பது வருவதால் இறைவனையும் 108 பெயர்களைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். இதுபோக தமிழ் வருடங்கள் 60, மாதங்கள் 12, நட்சத்திரங்கள் 27, கிரஹங்கள் 9 என்று இவை அனைத்தையும் ஒன்றாகக் கூட்டிப் பார்த்தால் 108 என்ற எண்ணிக்கை வருவதாலும் 108 என்கிற எண்ணிக்கையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார்கள். 1008 என்பது நமது உடம்பின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும் சஹஸ்ரார சக்ரத்தோடு தொடர்புடையது. எவர் ஒருவர் இந்த சஹஸ்ரார சக்ரத்தின் மூலம் இறைசக்தியை உணர்கிறாரோ அவரே இறையம்சம் பெற்றவராகவும் ஆகிவிடுகிறார். இதுபோன்ற காரணங்களால் 108, 1008 ஆகிய எண்கள் இந்து மதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
?இந்த காலத்தில் வாஸ்து சாஸ்திரத்தை முழுமையாக்க கடைப்பிடிக்க இயலவில்லையே?
– டி.நரசிம்மராஜ், மதுரை.
வாஸ்து சாஸ்திரம் என்பது புவியியல் அமைப்பு சார்ந்தது. இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது ஆலய வடிவமைப்பு மற்றும் சிற்ப சாஸ்திரம் சம்பந்தப்பட்டது. மெல்ல மெல்ல அதனை நாம் குடியிருக்கும் வீட்டிற்கும் பொருத்திப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் இந்த வாஸ்து சாஸ்திரம் குறித்து பெரிதாக பேசவில்லை. தற்காலத்தில் எல்லாவற்றையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு ஏதோ ஒரு கருத்தினை ஒவ்வொரு வரும் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய முன்னோர்கள் பின்பற்றியது மனையடி சாஸ்திரத்தை மட்டும்தான். அந்த மனையடி சாஸ்திரத்தைப் பின்பற்றி வீடு கட்டினாலே போதுமானது. வீட்டுப் பூஜையறையில் தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தோலே எந்த தோஷமும் அண்டாது.
The post ஏன்? எதற்கு ?எப்படி ? appeared first on Dinakaran.