நாகர்கோவில், மார்ச் 26: குமரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஷீலா ஜான் எடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் ரப்பர் பயிர் சுமார் 28000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மலைத்தோட்ட பயிரான ரப்பர் ஒரு இலையுதிர் மரமாகும். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திற்கு முன் ரப்பர் மரத்தில் இலைகள் உதிர்ந்து மீண்டும் துளிர்க்கும் தன்மை உடையது. இலைகள் பழுக்கும் போது ரப்பர் மரத்தில் பால் வடித்தல் நிறுத்தப்படும். இலைகள் உதிர்ந்து புது இலைகள் துளிர்க்கும் போது சாம்பல் நோய் புதிய தளிர்களை தாக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இந்த நோய் ஆயிடியம் ஹீவியே (Oidium heveae) என்னும் பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இப்பூஞ்சாண வித்துகள் மழை மற்றும் காற்று மூலமாக பரவுகிறது. மூடுபனி, குளிர் மற்றும் மழை காரணமாக அதிக ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலைகள், குறிப்பாக ரப்பர் மரங்கள் புதிய இலைகளை உற்பத்தி செய்யத் தொடங்கும் வசந்த காலத்தின் துவக்கத்தில் இப்பூஞ்சை அதிகமாக பரவும். மேலும் நெருக்கமான நடவுகள், நிழலான தோட்டங்களில் காற்று சுழற்சி குறைவாக இருக்கும் சூழ்நிலை நோய் பூஞ்சாண வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது. அதிக ஈரப்பதம் இலைகளில் இருக்கும் போது பூஞ்சை வித்துகள் எளிதாக முளைத்து நோய் தாக்குதல் ஏற்படுகிறது. ரப்பர் மரங்களில் வெள்ளை பவுடர் போன்ற நுண்துகள் பூஞ்சை வளர்ச்சி இளம் இலைகள், மொட்டுகள் மற்றும் மஞ்சரிகளில் வெளிப்படுகிறது, இது இலை சுருண்டு, உருமாற்றம் மற்றும் இறுதியில் இலை உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.
புள்ளிகளின் மீது வெள்ளை நிறப் பொடி போன்ற பொருள் உருவாகி, பல்வேறு அளவுகளில் வெள்ளைப் பொடி போன்ற புள்ளிகளை உருவாக்குகிறது. இலையின் முன் மற்றும் பின் மேற்பரப்பு முழுவதும் வெள்ளைப் பொடியால் மூடப்பட்டிருக்கும், இதனால் சுருக்கங்கள், மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் இலைகள் எளிதில் உதிர்தல் ஏற்படும். பாதிக்கப்பட்ட முதிர்ந்த இலைகளில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத் திட்டுகளும், சிதைந்த புள்ளிகளும் தோன்றும். இறுதியில் ரப்பர் லேடெக்ஸ் விளைச்சலை 45 சதவீதம் வரை குறைக்கிறது.
இதனை கட்டுப்படுத்த கந்தக தூளை ஒரு ஹெக்டருக்கு 11-14 கிலோ என்ற அளவில் 7-14 நாட்கள் இடைவெளியில் 3-5 முறை பயன்படுத்த வேண்டும். 70 சதவீதம் கந்தகம் மற்றும் 30 சதவீத talc கலவை பரிந்துரைக்கப்படுகிறது. கந்தகம் எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு பொருளாகும். எனவே, இதனை கந்தகம் தூவும் இயந்திரம் மூலம் தூவி கட்டுப்படுத்தலாம். மேலும் நாற்று பண்ணைகள் மற்றும் இளஞ்செடிகளுக்கு நனையும் கந்தகத்தை 25 கிராம்/லிட்டர் அல்லது கார்பன்டாசீம் 0.05 சதவீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ரப்பர் பயிரில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? தோட்டக்கலை துறை துணை இயக்குனர் விளக்கம் appeared first on Dinakaran.