
இந்தியாவின் வடக்கு எல்லையான காஷ்மீரில் இமயமலை இருக்கிறது. இது ஒரு எழில் கொஞ்சும் மலைப்பிரதேசமாகும். பனியால் சூழப்பட்டு பசுமை போர்வையால் போர்த்தப்பட்டதுபோல இந்த பகுதி இருக்கும். ஏரிகள், மலைகள், பூத்துக்குலுங்கும் மலர்கள் கொண்ட தோட்டங்கள், எங்கு நோக்கினும் கொத்துக்கொத்தாக தொங்கும் ஆப்பிள் சோலைகள் என்று பார்க்கும் இடமெல்லாம் கண்ணுக்கு ரம்மியமாக இருக்கும். காஷ்மீர் என்றாலே 'பியூட்டிபுல் காஷ்மீர்' என்று பாடத்தோன்றும். தேனிலவுக்கு போக விரும்புகிறவர்களின் சொர்க்க பூமி இது. காஷ்மீருக்கு வருவாய் சுற்றுலாத்துறை மூலமாகத்தான். அங்கு வாழும் மக்களுக்கும் வாழ்வாதாரம் என்றால் அது சுற்றுலா பயணிகளின் வருகையை வைத்துத்தான்.
அத்தகைய காஷ்மீரில் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் மத்திய-மாநில அரசாங்கங்கள் இரும்புக்கரம் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் அவர்கள் கொட்டம் ஓரளவுக்கு அடங்கியது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டதில் இருந்தும் அங்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்ததில் இருந்தும் ஓரளவுக்கு அமைதி திரும்பியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
2022-ல் 26 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வந்ததும் அங்குள்ள மக்களின் வாழ்வு வளம் பெறத்தொடங்கியது. 2023-ல் 31 லட்சம் பேரும், 2024-ல் 35 லட்சம் பேரும் காஷ்மீருக்கு மகிழ்வுடன் வந்தனர். இந்த ஆண்டு இதுவரை 6 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்த அமைதியையும், பூரிப்பையும் கெடுக்கும் விதமாக கோர சம்பவம் நடந்துவிட்டது. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் பஹல்காம் நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் பனி படர்ந்த மலையின் மேல் பைசரன் புல்வெளி என்று அழைக்கப்படும் அழகிய புல்வெளி இருக்கிறது. இதை சுற்றிலும் அடர்த்தியான பைன் மரக்காடுகள் சூழ்ந்திருக்கும். உள்ளூர் மக்களே அந்த இடத்தை மினி சுவிட்சர்லாந்து என்றுதான் அழைப்பார்கள். அந்த இடத்துக்கு மோட்டார் வாகனங்களில் செல்லமுடியாது. நடந்தோ அல்லது குதிரையிலோதான் செல்லவேண்டும்.
அந்த புல்வெளிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இத்தகைய சூழ்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மதியம் 2 மணிக்கு திடீரென அருகில் உள்ள பைன் காடுகளில் இருந்து கைகளில் எந்திர துப்பாக்கிகளுடன் 4 பயங்கரவாதிகள் வெளியே வந்தனர். அவர்களில் 3 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். ஒருவர் ஸ்ரீநகரை சேர்ந்தவர். அங்கு இருந்த 500 சுற்றுலா பயணிகளிடையே சர்வசாதாரணமாக நடந்துவந்து மதத்தை பற்றி கேட்டு சுட்டுத்தள்ளினார்கள். இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேருமே ஆண்கள்தான். பெண்களையும், குழந்தைகளையும் அவர்கள் தொடவில்லை. இதுதவிர பலர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். காஷ்மீரில் திரும்பியுள்ள அமைதியை சீர்குலைக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி காஷ்மீருக்கு யாரும் சுற்றுலா வரக்கூடாது என்ற நோக்கத்துடனும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் இது என்று கருதப்படுகிறது. இனியும் மத்திய-மாநில அரசுகள் பொறுத்துக்கொண்டு இருப்பதில் பயனில்லை. சரியான பதிலடி கொடுக்கவேண்டும். படையெடுத்து செல்வதுபோல ராணுவம், போலீஸ் படையை காஷ்மீரில் முழுமையாக இறக்கி பயங்கரவாதிகளை வேரோடு பிடுங்கி எறியவேண்டும்.