
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர். உள்ளூர் தொடர்களில் ஒரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார்.
இருப்பினும் பெருமளவில் வாய்ப்பு பெறாத அவர் கிடைக்கும் வாய்ப்புகளிலும் அசத்தவில்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். இப்படி ஒரு ஜாம்பவான் வீரரின் மகன் வாய்ப்பு பெற முடியாமல் தடுமாறி வருவது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தம்முடைய மகன் யுவராஜ் சிங் தலைமையில் பயிற்சிகளை எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் போல அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் மிரட்டுவார் என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அர்ஜூனை பொறுத்தவரை பந்துவீச்சை விட பேச்சிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சச்சின் தெண்டுல்கர் மகனை யுவராஜ் சிங் தனது சிறகுகளுக்குள் கொண்டு வந்தால் 3 மாதங்களில் அவர் அடுத்த கிறிஸ் கெய்லாக வருவார் என்று நான் பந்தயம் கட்டுவேன். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயத்தை சந்திப்பார்கள். அதனால் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பவுலிங் செய்ய முடியாது. அர்ஜுனை சிறிது காலம் யுவராஜிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.