பள்ளிகொண்டா, பிப்.5: விரிஞ்சிபுரம் கோயிலில் ரதசப்தமி பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு சுவாமி பல்வேறு கிராமங்களில் திருவீதி உலா வந்தது. பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு கார்த்திகை மாத கடைசி ஞாயிறு மற்றும் சித்திரை பிரமோற்சவம் உட்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. மேலும், காணும் பொங்கல், தைப்பூச நாட்களில் பார்வேட்டை உற்சவத்தின் போது கோயில் நடை அடைக்கப்பட்டு உற்சவ மூர்த்தி சுவாமிகள் பல்வேறு கிராமங்களுக்கு விஜயம் செய்து வருவது வழக்கம்.
அதேபோல், இந்தாண்டு காணும் பொங்கல் பார்வேட்டை உற்சவம் முடிந்த நிலையில் ரதசப்தமியை முன்னிட்டு உற்சவ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி நேற்று காலை முதல் விரிஞ்சிபுரம் செதுவாலை வழியாக மருதவல்லிபாளையம், கொல்லைமேடு ஆவாரம்பாளையம், மேல்மொணவூர், கீழ் மொணவூர், சதுப்பேரி, சிறுங்காஞ்சி, தெள்ளூர், ஆகிய கிராமங்களில் இரவு 11 மணி வரை சுவாமி வீதி உலா நடைபெற்றது. கிராமங்கள் தோறும் சுவாமி வீதியுலாவின்போது வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்று பெரிய தெள்ளூர், ஜமால்புரம், வடக்குமேடு, அப்துல்லாபுரம், மேட்டூர், மின்னல் நகர் ஆகிய கிராமங்களில் இரவு 10 மணி வரை சுவாமி பார்வேட்டை உற்சவம் சென்று மீண்டும் கோயிலுக்கு திரும்ப உள்ளது. அதனையடுத்து தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை அம்மன் உற்சவ மூர்த்திகள் பல்வேறு கிரமங்களுக்கு விஜயம் செய்வதால் அந்த சமயத்தில் கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பிரியா, கணக்காளர் ஆனந்த் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post ரதசப்தமியையொட்டி பார்வேட்டை உற்சவம் பல்வேறு கிராமங்களில் சுவாமி வீதி உலா விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் appeared first on Dinakaran.