கோடை கால சரும நோய்கள்…

8 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

தடுக்க… தப்பிக்க!

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் வியர்வையால் ஏற்படும் தோல் நோய்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையின் தோல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் மித்ரா வசந்த் விக்னேஷ் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்களது உடலையும் வாழ்க்கை முறையையும் சுட்டெரிக்கும் வெயிலைத் தாங்குவதற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலத்தில் வியர்வை காரணமான தோல் நோய்கள், தொற்றுகள் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தோல்களில் தடிப்புகள் போன்றவை பலருக்கு ஏற்படுகிறது. வியர்வையால் ஏற்படும் நோய்களை தவிர்க்க 2 முறை குளித்து, நல்ல தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது என்பது முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும்.

காற்று உள்ளே செல்லாத இடுப்புப் பகுதி, அக்குள் போன்ற துணிகளால் மூடப்பட்ட பகுதிகளில் வியர்வை எப்போதும் இருக்கும். இதன் காரணமாக இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று மற்றும் மேலோட்டமான பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதில் படர்தாமரை எனப்படும் பூஞ்சை தொற்றும் ஒன்றாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. இந்த தொற்று பரவாமல் இருக்க அவர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர் பயன்படுத்தக்கூடாது.

இதேபோன்று மற்ற தொற்றுநோய் பாதிப்பிலும் பின்பற்றப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், நோயாளிகள் விரைவான சிகிச்சைக்காக ஸ்டீராய்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துகின்றனர். இந்த மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளிக்கலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொற்று அதிகரிக்கும், நோய் முற்றிய நிலையில் நோயாளிகள் அதற்கு முறையான மருந்துகளை எடுக்கும்போது மட்டுமே அது முழுமையாக குணம் அடையும். இந்த நோய் பாதித்த ஒருவர், மற்றவர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க, முறையான சிகிச்சையைப் பெற உடனடியாக ஒரு தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

சிலருக்கு அதிக சூரிய ஒளி காரணமாக முகம், முதுகு, கைகள் மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் தோலில் தடிப்புகள் ஏற்படலாம். இதன் காரணமாக அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு முறையான சிகிச்சை பெறாவிட்டால் இந்த தடிப்புகள் உடல் முழுவதும் பரவிவிடும். இந்த பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள சூரிய ஒளி உடலில் படாமல் இருக்க குடை, அகலமான பெரிய தொப்பி, உடலை முழுமையாக மூடும் ஆடைகள் மற்றும் சன்கிளாஸ்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

மேலும் உங்கள் தோலின் தன்மை, உங்களது வாழ்க்கை முறை மற்றும் பிற நிலைமைகளைப் பொறுத்து சரியான சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். நீங்களாவே மருந்துக்கடைகளுக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கி பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் உங்களுக்கு பொருத்தமற்றதாகவோ அல்லது ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தும். தோலை ஆரோக்கியமாக பராமரிக்க ஒரு முறை தோல் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

அதேபோல் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல் போன்றவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தோல் என்பது உள் ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகும். தோல் தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்க நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சினைகள் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் அதற்கு முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தலையில் உள்ள முடியில் அழுக்கு சேராதவாறு நன்கு தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். முடியை சரியாக பராமரிக்காவிட்டால் தலையில் வீக்கம், பொடுகு மற்றும் தோல் அழற்சி போன்றவை ஏற்படும். குளிப்பதற்கு 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன் தலைக்கு எண்ணெய் தடவுங்கள். உச்சந்தலையில் எண்ணெய் தடவுவதைத் தவிர்க்கவும், எண்ணெய் பசையுடன் நீங்கள் வெளியே செல்வது என்பது அதிக அழுக்கு சேருவதற்கு வழிவகுக்கும்.

சமச்சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, நிம்மதியான தூக்கம் மற்றும் மன ஆரோக்கியம் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். சமூக ஊடகங்களில் சொல்லப்படுவதை பின்பற்றாமல், அவை எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை சரிபார்த்து, எந்தவொரு தோல், முடி மற்றும் நகப் பிரச்சினைகளுக்கும், தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது. சமூக ஊடகங்களின் போலியான விளம்பரத்தால் உங்கள் உடலை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு டாக்டர் மித்ரா வசந்த் விக்னேஷ் கூறியுள்ளார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post கோடை கால சரும நோய்கள்… appeared first on Dinakaran.

Read Entire Article