நன்றி குங்குமம் டாக்டர்
உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் சத்துக்கள் மிக அவசியமானது ஆகும். அவை உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அந்தவகையில், அக்ரூட் பருப்பு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகும்.
நட்ஸ் வகைகளிலேயே அக்ரூட் தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது ஆகும். ஒரு அவுன்ஸ் அக்ரூட்டில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதோடு அக்ரூட்டில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அக்ரூட்டில் உள்ள MUFA மற்றும் ஒமேகா 3 கொழுப்புகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா-3 மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட அக்ரூட்டில் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது. அந்த வகையில், அக்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகளை குறித்து காண்போம்.
அக்ரூட் அதிகப்படியான புரோட்டீன் சத்துக்களை கொண்டுள்ளதால், தினசரி எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் புத்துணர்ச்சியை பெற முடியும் மேலும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. அக்ரூட் பருப்பில் உள்ள அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை ஒருவர் தினமும் சாப்பிட்டால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகளான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.
வைட்டமின் ஈ என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தின் காரணமாக அக்ரூட் பருப்புகள் சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் அக்ரூட் பருப்பை தினமும் சாப்பிட, ரத்தத்தில் மெலடோனின் அளவு அதிகரித்து இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
தொகுப்பு: பா.பரத்
The post ஆரோக்கியத்தை காக்கும் அக்ரூட்! appeared first on Dinakaran.