ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கடைசி லீக் டெஸ்ட்டில் ஜார்கண்ட்-தமிழ்நாடு அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்கண்ட் 185 ரன்னிலும், தமிழ்நாடு 106 ரன்னிலும் சுருண்டன. அதையடுத்து 79 ரன் முன்னிலை பெற்று 2வது இன்னிங்சை ஆடிய ஜார்கண்டை 154 ரன்னில் தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் , அஜித் ராம் சுருட்டினர். தொடர்ந்து 234 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு 2வது இன்னிங்சை தொடங்கியது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு 2வது இன்னிங்சில் 5விக்கெட் இழப்புக்கு 137ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த விஜய் சங்கர் 33, அஜித் ராம் 5 ரன்னுடன் 3வது நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்தனர்.
கூடுதலாக ஒரு ரன் கூட எடுக்காமல் விஜய் சங்கர், அஜித்ராம் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அந்த அதிர்ச்சியை அடுத்து வந்த வீரர்களும் அள்ளித்தர தமிழ்நாடு தோல்வியை நோக்கி நகர்ந்தது. இடையில் அதிரடியாக விளையாடிய முகமது அலி 35 ரன் விளாசி ஆறுதல் அளித்தார். அவரும் ஆட்டமிழக்க காயம் காரணமாக கடைசி வரிசையில் களமிறங்கிய பாபா இந்திரஜித், ஆடாமலேயே ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேற தமிழ்நாடு அணியின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. திரிலோக் நாத் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். அப்போது தமிழ்நாடு 189 ரன் மட்டுமே எடுத்திருந்தது. எனவே ஜார்கண்ட் 44 ரன் வித்தியாசத்தில் லீக் சுற்றில் 2வது வெற்றியை பெற்றது. இப்போட்டியில் தோற்றபோதும், தமிழ்நாடு அணிக்கு காலிறுதி வாய்ப்பு ஏற்கனவே உறுதியாகி உள்ளது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஜார்க்கண்ட் வீரர் உத்கர்ஷ் சிங், ஆட்ட நாயகன்.
The post ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: கடைசி போட்டியில் தோற்ற தமிழ்நாடு காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.