
டெல்லி,
நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் டி பிரிவில் டெல்லியில் நேற்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழகம் - டெல்லி அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக இன்னிங்சை தொடங்கினர். இதில் ஜெகதீசன் அரைசதம் அடித்த நிலையில் 65 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கினார். சுந்தர் - சாய் சுதர்சன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இந்த இணையை பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் 88 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 379 ரன்கள் எடுத்திருந்தது. . தமிழகம் தரப்பில் சாய் சுதர்சன் 202 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னுடம் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் நவ்தீப் சைனி 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 158.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் ஹிமான்ஷு சவுகான், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து டெல்லி அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.