
புதுடெல்லி,
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறி உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன.இந்த மசோதா விவகாரம் மத்தியில் ஆளும் பாரதீயஜனதா அரசில் இடம் பெற்றுள்ள முக்கிய கூட்டணி கட்சியான பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு திடீர் நெருக்கடியை கொடுத்துஊள்ளது. ஆளும் கூட்டணி கட்சி என்பதால் ஐக்கிய ஜனதா தளம் வக்பு திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.முன்னணி தலைவரு களான முகமது அஷ்ரப் அன்சாரி எம்.பி. மற்றும் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷா நவாஸ் மாலிக் ஆகியோர் முதலில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் இளைஞர் பிரிவு மாநில செயலாளர் தப்ரேஸ் ஹசன், மாநில பொதுச்செயலாளர் முகமது தப்ரேஷ் சித்திக், மற்றும் முகமது தில்ஹசன் ரெய்ன் ஆகியோரும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைவர் முதல்- மந்திரி நிதிஷ்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது உங்கள் ( நிதிஷ்குமார்) மதசார்பற்ற பிம்பத்தை நீங்கள் தக்க வைத்து கொள்வீர்கள் என நம்பினோம். ஆனால் வக்பு திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை உடைத்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
அடுத்தடுத்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து 5 முஸ்லீம் தலைவர்கள் பதவி விலகியது அக்கட்சியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பாரதீயஜனதா கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இருந்து வருகிறது.தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் முக்கிய தலைவர்கள் பலர் பதவி விலகி வருவதால் அக்கட்சிக்கு திடீர் நெருக்கடியை கொடுத்துள்ளது.