கோவை,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 3-வது லீக்கில் தமிழ்நாடு- சத்தீஷ்கார் அணிகள் (டி பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சத்தீஷ்கார் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சத்தீஷ்கார் 169.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 500 ரன்கள் குவித்தது. சத்தீஷ்கார் தரப்பில் ஆயுஷ் பாண்டே 124 ரன்கள் எடுத்தார்.
தமிழகம் தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்திருந்தது. தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 6 ரன்னுடனும், அஜித் ராம் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் ஆண்ட்ரே சித்தார்த் 55 ரன்கள் எடுத்தார். சத்தீஷ்கார் தரப்பில் சுபம் அகர்வால் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் பாலோ ஆனை சந்தித்த தமிழகம் தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் லோகேஷ்வர் 6 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஆண்ட்ரே சித்தார்த் களம் இறங்கினார். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் தனது 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டை இழந்து 71 ரன்கள் எடுத்துள்ளது. தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 28 ரன்னுடனும், ஆண்ட்ரே சித்தார்த் 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழகம் இன்னும் 170 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.