ரஞ்சி டிராபி காலிறுதி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்...3ம் நாள் முடிவில் விதர்பா 297 ரன்கள் முன்னிலை

11 hours ago 2

நாக்பூர்,

இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் விதர்பா - தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 353 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 122 ரன்கள் குவித்தார். தமிழகம் தரப்பில் சோனு யாதவ் மற்றும் விஜய் சங்கர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக நேற்றைய 2ம் நாள் முடிவில் தமிழகம் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 225 ரன்ன்களில் ஆல் அவுட் ஆனது.

தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 65 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் ஆதித்ய தாக்கரே 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 128 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. விதர்பா தொடக்க வீரர்களாக அதர்வா தைடே மற்றும் துருவ் ஷோரே களம் இறங்கினர்.

இதில் அதர்வா தைடே 19 ரன்னிலும், துருவ் ஷோரே 20 ரன்னிலும், அடுத்து வந்த டேனிஷ் மேலவார் ரன் எடுக்காமலும், கருண் நாயர் 29 ரன்னிலும், அக்ஷய் வட்கர் 8 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து யாஷ் ரத்தோட் மற்றும் ஹர்ஷ் துபே ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் யாஷ் ரத்தோட் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் 3ம் நாள் முடிவில் விதர்பா தனது 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இதுவரை விதர்பா அணி 297 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

விதர்பா தரப்பில் யாஷ் ரத்தோட் 55 ரன்னுடனும், ஹர்ஷ் துபே 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

Read Entire Article