பெங்களூரு,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன்படி 6-வது கட்ட லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இதில் பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் (சி பிரிவு) சுப்மன் கில் தலைமையிலான பஞ்சாப், மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய பஞ்சாப் 55 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ரமந்தீப் சிங் 16 ரன்கள் அடித்தார். சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய கர்நாடக அணி 475 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் 203 ரன்கள் அடித்தார்.
பின்னர் 420 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் அணி இம்முறையும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் சுப்மன் கில் மட்டும் தனி ஆளாக போராடி சதமடித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொதப்பினர். முடிவில் 63.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த பஞ்சாப் 213 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இதனால் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 207 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் சதம் வீணானது.