![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38433863-cheeta.gif)
உடுமலை,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரத்தில் செல்வராஜ் , அபிநயா வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் அபிநயா, வீட்டு குளியல் அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து செல்வராஜ் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுபற்றி அறிந்ததும் உடுமலை போலீசார் அங்கு சென்று, அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகளுடன் வந்த செல்வராஜ் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மின் மோட்டார் அறையில் செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த மனைவி தற்கொலை செய்து கொண்ட வேதனையில் கணவனும் சில மணி நேரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு சிவிகா (9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் இருந்தனர். தற்போது தாய், தந்தையை இழந்த குழந்தைகள் நிற்கதியாக நின்ற சம்பவம் அங்குள்ள அனைவரையும் கண்கலங்க செய்தது.