
நாக்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் விதர்பா - கேரளா அணிகள் ஆடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா தனது முதல் இன்னிங்சில் 123.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
விதர்பா தரப்பில் அதிகபட்சமாக டேனிஷ் மலேவர் 153 ரன் எடுத்தார். கேரளா தரப்பில் நித்தேஷ், ஈடன் ஆப்பிள் டாம் தலா 3 விக்கெட்டும், பாசில் 2 விக்கெட்டும், ஜலஜ் சக்சேனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கேரள அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 39 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
கேரளா தரப்பில் ஆதித்ய சர்வாதே 66 ரன்களுடனும் (120 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் சச்சின் பேபி 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த கேரளா தரப்பில் ஆதித்ய சர்வாதே 79 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த சல்மான் நிசார் 21 ரன், முகமது அசாரூதின் 34 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் சச்சின் பேபி 98 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஜலஜ் சக்சேனா - ஈடன் ஆப்பிள் டாம் ஜோடி சேர்ந்தனர். இதில் சக்சேனா 28 ரன்னிலும், ஈடன் ஆப்பிள் டாம் 10 ரன்னிலும், அடுத்து வந்த நித்திஷ் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் கேரளா அணி தனது முதல் இன்னிங்சில் 125 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 342 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
விதர்பா தரப்பில் ஹார்ஷ் துபே, தர்ஷன் நல்கண்டே, பார்த் ரகடே ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன் 3ம் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. விதர்பா அணி தற்போது வரை 37 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.