
சென்னை,
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தார்.
இதனிடையே, வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
காவல் நிலையத்துக்கு அருகே தடுப்புகள் போடப்பட்டு, சீமானின் கார் செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நா.த.க. தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கிடையில், காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அவரிடம் வழக்கு தொடர்பாக சுமார் 63 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீமானிடம் சுமார் ஒரு நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது விசாரணை நிறைவடைந்துள்ளது.
சீமானிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போலீசார் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் சீமான் முழு ஒத்துழைப்புடன் பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.