
சென்னை,
நடிகர் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' திரைப்படம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பல பிரச்சினைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை அஜித் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், திரைப் பிரபலங்களான திரிஷா, ரெஜினா மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து 'விடாமுயற்சி' படத்தின் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.
அதனை தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு சென்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா, நடிகர்கள் ஆரவ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்து மகிழ்ந்தனர். அதில் நடிகர் ஆரவ் திரையரங்கில் உள்ள ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.