
பஞ்சாப்பை சேர்ந்த தம்பதி ஒன்றின் விவகாரத்து வழக்கு பதிண்டா குடும்ப நல கோர்ட்டில் நடந்தது. அப்போது தனது மனைவி தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அளித்த கொடூரத்துக்கு ஆதாரமாக இருவரும் பேசிக்கொண்ட தொலைபேசி உரையாடல் பதிவுகளை அந்த கணவர் கோர்ட்டில் வழங்கினார்.
முன்னதாக அவர் மனைவியுடன் பேசும்போது, அவரை அறியாமல் அந்த அழைப்புகளை பதிவு செய்திருந்தார். அவற்றை ஒரு சி.டி.யில் பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதை கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது. இதற்கு எதிராக அவரது மனைவி பஞ்சாப்-அரியானா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தன்னை அறியாமல் தனது உரையாடலை பதிவு செய்தது, தனது தனியுரிமையை மீறிய செயல் என அவர் வாதிட்டார்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டும், கணவன்-மனைவிக்கு இடையேயான உரையாடலை ரகசியமாக பதிவு செய்வது சாட்சிய சட்டம் பிரிவு 122-ன்படி தடை செய்யப்பட்டது என்றும், எனவே அவற்றை சட்ட நடைமுறைகளுக்கு பயன்படுத்த முடியாது என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் நாகரத்னா, சதிஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இதில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ரகசியமாக பதிவு செய்யப்பட்ட கணவன்-மனைவி இடையேயான தொலைபேசி உரையாடலை விவாகரத்து வழக்கில் ஆதாரமாக பயன்படுத்தலாம் என தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது:-
கணவன்-மனைவி இடையேயான தொலைபேசி உரையாடலின் ரகசிய பதிவை ஆதாரங்களாக அனுமதிப்பது குடும்ப நல்லிணக்கம் மற்றும் திருமண உறவுகளை பாதிக்கும் என்றும், ஏனெனில் இது வாழ்க்கைத் துணைவர்களை உளவு பார்ப்பதை ஊக்குவிக்கும் என்றும் வாதிடப்படுகின்றன. மேலும் சாட்சிய சட்டத்தின் பிரிவு 122-ன் நோக்கத்தை மீறுவதாகவும் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அத்தகைய வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் தீவிரமாக வேவு பார்க்கும் ஒரு கட்டத்தை அடைந்திருந்தால், அதுவே உடைந்த உறவின் அறிகுறியாகும். மேலும் இது அவர்களுக்கு இடையே நம்பிக்கையின்மையைக் குறிக்கிறது.
எனவே இந்த உரையாடல் பதிவை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம். அதன்படி குடும்ப நல கோர்ட்டு இந்த வழக்கின் விசாரணையை தொடரலாம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டின் தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர்.