
கொச்சி,
கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18-ந்தேதி வரை பரவலாக மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு நேற்று முன்தினமும், அத்துடன் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை (புதன்கிழமை) எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மோசமான வானிலை நிலவும். இதனால் நேற்று முன்தினம் முதல் நாளை மறுநாள் வரை கேரள கடற்கரை முழுவதும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.