* திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை, நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறுவதைக் கேட்கும்போது சிரிப்பு தான் வருகிறது.
* தனது சொத்துகளை, கவுரவவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள RANGE ROVER காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார்.
சென்னை: நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவை காதலிப்பதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார். தொடர்ந்து ரவி மோகன் ஆர்த்தியின் மீதும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமார் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைக்க, ஆர்த்தி மற்றும் சுஜாதா விஜயகுமாரும் ரவி மோகனுக்கு பதிலடி தரும் வகையில் புகார்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே (கெனிஷா) காரணம். “உங்கள் வாழ்வின் ஒளி” (கெனிஷாவை தனது வாழ்வின் ஒளி என ரவி மோகன் குறிப்பிட்டு இருந்தார்) என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை.
இந்த நபர் சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யபடும் முன்பே எங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார். தனது சொத்துகளை, கவுரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை. நன்றாக முன் கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள RANGE ROVER காரில் தான் வீட்டை விட்டுச் சென்றார். உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி “தொலைத்த பெற்றோர்கள்” என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? ஆனால் அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் கூறுகிறார், அப்படியானால், ஏன் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தார்? ஏன் ஓவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்? அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்துவிட்டு தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில் தான் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதன் காரணம் பயம் அல்ல, அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்வைக் காப்பாற்ற முடியாமல் போனதே. வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தேன் என்ற அவரின் குற்றச்சாட்டும் பொய்யானது. எங்களுக்கு திருமணமான நாள் முதல் நாங்கள் என் மாமனார், மாமியாருடன் புகுந்த வீட்டிலும் மற்றும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் உள்ள இரண்டு வீடுகளில் மட்டுமே வசித்தோம்.
கொரோனா காலத்தில் நாங்கள் வீடு மாற்றம் செய்த ஓரிரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதும் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியதே இல்லை. எங்களை பிள்ளைகளை கருவிகளாக்கி என் தாய்மையை அனுதாபத்திற்கு உரியதாக்கி, ஆதாயம் தேட நினைப்பவள் நான் அல்ல. என்னை அவ்வாறு நினைப்பவர்கள் உண்மையில் ஒரு தாயின் சிறப்பை உணராதவர்களே. கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் அவர் தன் பிள்ளைகளைச் சந்தித்து இருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பெயரில் மட்டுமே. எங்கள் பிள்ளைகள் இன்று படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர்களது தொலைபேசிகள் எப்போதும் உபயோகத்தில் இருந்தும் அவர்கள் அப்பா அழைக்காத காரணம் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் எந்த சக்தியும் அவரைத் தடுத்திருக்க முடியாது. நிச்சயம் வந்து சந்தித்திருப்பார். எங்கள் குழந்தைகள் அவர்கள் தந்தையை சந்திப்பதை மிகவும் விரும்புகிறார்கள்.
குழந்தைகளை அவரிடம் இருந்து அப்புறப்படுத்தியுள்ளேன் என உருகும் அவர், அவர்களை சந்திக்கவோ அல்லது அவர்களை தன் பொறுப்பில் ஒப்படைக்கும் படியோ சட்டப்பூர்வமாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. என் கணவர் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருந்தபோது இங்கு நடந்த ஒரு சிறு கார் விபத்து. ஆண்டவன் அருளால் என் குழந்தைகளுக்கு எந்த துன்பமும் ஏற்படுத்தாத அந்த விபத்தில் சேதமடைந்த காரை சரி செய்ய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்பட்டன. அதை எடுத்துக் கொள்ள எங்கள் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால், என்னை உள்ளே கூட நுழைய விடாமல் காவலர்கள் வெளியேற்றினார்கள். சட்டப்படி எனக்கும் உரிமையுள்ள ஒரு இடத்திலிருந்து அவமானப்படுத்தி அனுப்பட்டேன் என்பது தான் உண்மை. அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப்பட்டதாக சொல்கிறார். மனம் வலிக்கிறது. திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை, நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக கூறுவதைக் கேட்கும்போது வேதனையில் சிரிப்பு தான் வருகிறது.
அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும், அது அவரது விருப்பத்தினால் தான் இருந்திருக்க முடியுமே தவிர, கட்டாயத்தினால் அல்ல. 15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது சொந்த கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் என அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும் என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்தால் என் சொந்த அடையாளத்தில் இதைவிட இருமடங்கு வசதியான, உயர்வான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருப்பேன். நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவைகளே. அதன் எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அவை முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித்தள்ள வேண்டும் என முடிவு எடுத்த நீங்கள், அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். இன்று என் கண்ணியமும் நேர்மையும் உங்களால் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டுள்ளதை வேதனையோடு கடக்க முயற்சிக்கிறேன். இவ்வாறு ஆர்த்தி கூறியுள்ளார்.
The post ரகசிய வாழ்க்கையை காப்பாற்றவே ரவி மோகன் பிரிந்தார்; எங்கள் பிரிவுக்கு கெனிஷாதான் காரணம்: ஆர்த்தி சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.