பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் 24ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி ரங்கசாமி பங்கேற்பாரா?

4 hours ago 3

புதுச்சேரி, மே 21: அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டெல்லியில் 24ம்தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேஜ கூட்டணி ஆட்சியின் முதல்வராக ரங்கசாமி உள்ளார். சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்த ஒன்றிய அமைச்சரான மன்சூக் மாண்டாவியாவிடம் தனது ஆதங்கத்தை ரங்கசாமி வெளிப்படுத்தியதாக தகவல் வெளியானது. மேலும் மாநில அந்தஸ்து விவகாரம், கவர்னர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மாற்றம் குறித்து அவரிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் வருகிற 24ம்தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ம்தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதேபோல் மற்ற மாநிலங்களின் முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில் இக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பாரா அல்லது வழக்கம்போல் புறக்கணிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஜூலையில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரி சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார். 2021ல் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றபின் ஒரேஒரு முறை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பிறகு இதுவரையிலும் அவர் டெல்லி செல்லவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என்று முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, ஒன்றிய அரசின் திட்டங்களை அமைச்சர்கள் டெல்லி சென்று கேட்டு பெறுகின்றனர் என ரங்கசாமி மழுப்பலாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் 24ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி ரங்கசாமி பங்கேற்பாரா? appeared first on Dinakaran.

Read Entire Article